வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட்; அகலக் கறுப்புக் கண்ணாடி; சட்டைப் பாக்கெட்டுகளில் கத்தைகத்தையாகப் பேப்பர்கள்; ஆறேழு பேனாக்கள்; கையில் ஒரு விசில்; பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கேமரா; எந் நேரமும் பாதுகாப்புக்கு ஏ.கே-47 இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு காவலர் என வீதிகளில் கூட்டத்தில் ஒருவராக உலவுகிற இவர்... ‘டிராஃபிக்’ ராமசாமி!‘‘அதிகாலையில் ஏழு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். பஸ்லதான் போகணும். கூட்டம் நெருக்கியடிக்கும். எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லே, ஆனா, எனக்குப் பாதுகாப்புக்குன்னு இந்தத் துப்பாக்கியை வெச்சுக்கிட்டு என்னோடவே பஸ்ல வர்ற போலீஸ் தம்பிங்க தான் பாவம். கோடம்பாக் கத்தில் இருந்து கிளம்பினா, பஸ் லிபர்டியைத் தாண்டு றதுக்குள்ளவே நெருக்கியடிச்சு டிராஃபிக் முட்டிக்கும். உடனே பஸ்ல இருந்து இறங்கி, ரோட்ல டிராஃபிக்கை ஒழுங்குபண்ண ஆரம்பிச்சுடுவேன். தம்பிக்குத் தான் சிரமம், ஏ.கே. 47 துப் பாக்கியை வெச்சுக்கிட்டு என் பின்னாலயே ஓடி வரும்’’ என்று தன் பாதுகாவலரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் ராமசாமி.‘‘பி.அண்ட்.சி. மில்லில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வெளியில் வந்த பிறகு, தினமும் ரோட்டில்தான் எனக்கு வேலை. 98-ல் பாரிஸ் கார்னரில் திடீர்னு ஒரு நாள் எல்லா சாலைகளையும் ‘ஒன் வே’ ஆக்கினாங்க. அதை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருந்தேன். கூடவே, உயர் நீதி மன்றத்தில் வழக்கும் போட்டேன். ஒன் வே ஆக்கின காலத்தில் அந்தப் பகுதியில் 22 பேர் விபத்தில் இறந்து போனாங்க. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் எனக்கு வெற்றி கிடைச்சுது. பாரிஸ் கார்னரில் போக்குவரத்து பழைய படியே மாறுச்சு. அதேபோல் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோதும் வழக்குத் தொடர்ந்து, அதிலும் ஜெயிச்சோம்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, மீன்பாடி வண்டி மோதி யாராவது இறந்தா, அதுக்கு நஷ்டஈடு வாங்க முடியாது. காரணம், அந்த வண்டிகளுக்குப் பதிவே கிடையாது. 2.5 சக்தியுள்ள மோட்டார்களை வெச்சுதான் மீன்பாடி வண்டிகளை ஓட்டலாம். ஆனா, புல்லட் இன்ஜின் வெச்சு அசுர வேகத்தில் போய் மனிதர்களைப் பயமுறுத்தினாங்க. அவங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந் திருக்கேன்.அதே மாதிரி, இத்தனை அகலச் சாலையில் இவ்வளவு மாடிகள்தான் கட்டணும்னு சட்டம் இருக்கு. தி.நகர், உஸ்மான் சாலையோட அகலம் 85 அடி. அதில் தரைத் தளத்துக்கு மேல் மூணு மாடிகள் வரைதான் கட்ட முடியும். எப்போதும் சந்தடிமிகுந்த ரங்கநாதன் தெருவின் அகலம் 35 அடிதான். ஆனா, உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பல அடுக்கு மாடிகள் கட்டி வெச்சிருக்காங்க. அதை எதிர்த்து வழக்கு போட்டேன். அதிலும் எனக்கு வெற்றி. ‘சட்டத்தை மீறிச் செயல்படுவதற்கு அனுமதித்து சென்னை நகரின் அழகையே கெடுத்துவிட்டீர்கள். மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்!’னு உச்சநீதிமன்றமே இப்போ தமிழக அரசைக் கண்டிச்சிருக்கு. இது என் இடைவிடாத போராட்டத்துக்குக் கிடைச்ச முக்கியமான வெற்றி’’ என்கிறார் ராமசாமி.‘‘என் வழக்குகளில் நானே ஆஜர் ஆகிறேன். நான் சட்டம் படிக்கலை. ஆனா, தேவை கருதி ஓரளவு தெரிஞ்சு வெச்சிருக்கேன். நேர்மையும் கொள்கை யில் தெளிவும் இருந்தா போதும், நிச்சயம் நீதி கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு தவறுக்கு எதிரா, குரல் கொடுத்தோம்கிற சந்தோஷமாச்சும் கிடைக்குமே!’’ என்கிறார் உற்சாகமாக!‘‘வழக்கை வாபஸ் வாங்கினா, லட்சக் கணக்கில் பணம் தர்றதா சில வணிக நிறுவனங்கள் ஆள் அனுப்பிப் பேசு வாங்க. சில பேர் என்னை மிரட்டிப் பார்ப்பாங்க. என் மேல் திருட்டு வழக்குப் போட்டிருக்காங்க. பிக்பாக்கெட் கேஸ் போட்டு ஜட்டியோட நிப்பாட்டி, ஸ்டேஷனில் கட்டிவெச்சு அடிச்சாங்க. அரை நிர்வாணமா என்னை ரோட்ல கைவிலங்கு மாட்டி, இழுத் துட்டுப் போனாங்க. நடுத்தெரு வில் என்னைக் கத்தியால் குத்தினான் ஒருத்தன். குத்தும்போது ஒரு இன்ஸ்பெக்டர் வேடிக்கை பார்த்துட்டிருந்த கொடுமையும் நடந்தது.ஒவ்வொரு முறை நான் நீதிமன்றத்துக்குப் போகும் போதும் என் உயிருக்குக் குறி வைக்கப்படுது. அதனால்தான் நீதிமன்றமே எனக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு கொடுத் திருக்கு. எனக்கு இது தேவை இல்லை. எவனாவது என்னைப் போட்டுத் தள்ளிட்டா தான், என்ன பண்ண முடியும்? ஆனா, அதிகாரிகளையும் அமைச் சர்களையும் பாதுகாக்கிறது மட்டும் அரசாங் கத்தோட கடமை இல்லை; நம்மை மாதிரி சாதாரண மனிதர்களையும் காக்கிற கடமை அரசுக்கு உண்டு என்பதற்கு உதாரணமாகத் தான் இந்த ஆயுதப் பாதுகாப்பை ஏத்துக் கிட்டேன்...’’ என்றுபேசிக்கொண்டே இருக்கும் ராமசாமி, தடாலென்று பாய்ந்து ஓடி, ‘நோ என்ட்ரி’க்குள் புகுந்த ஒரு வாகனத்தை மடக்கிப் பிடித்து ஃபைன் போட வைக்கிறார்.
சபாஷ்!
நன்றி -விகடன்
No comments:
Post a Comment